நரசிம்மரின் அவதாரமும் அதன் சிறப்புகளும் !!

Webdunia
"எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
 
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இரண்யகசிபுவை வதம்  செய்தபோது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
 
மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
 
பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. சகஸ்ரநாமத்தில்  முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
 
ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக்  கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
 
நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
 
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்