புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்...!

Webdunia
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. இந்நாளில் உடல் மற்றும் உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
 
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
 
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
 
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
 
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
 
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
 
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.  
 
ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்