சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம் என்ன தெரியுமா...?

Webdunia
நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும். 
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று  உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில்  இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று  செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர். 
 
நாசியின் வழியாக சுவாசிக்கும் நேரம்: 
 
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி 
 
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர  கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான  செயல்பாடுகளும் உள்ளன. 
 
வலது நாசிக் காற்று (சூரிய கலை) 
 
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே. வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில்  உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். 
 
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும். 
 
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும். 
 
இடது நாசிக் காற்று (சந்திர கலை) 
 
* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும். 
 
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். 
 
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும். 
 
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்