பகவான் ராமகிருஷ்ணரின் அருள் துளிகள்!

Webdunia
ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள் தற்பெருமையும் கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.
 
“என் செயலாவது யாதென்று மில்லை” என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால் மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும்.  அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.
 
இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் 'நான் இறைவனின் அடிமை இறைவனின் பக்தன்'' என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இதுதான் பக்தி யோகம் எனப்படும்.
 
இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால் இறைவனே இல்லை என்று   சாதிக்காதே!
 
பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.
 
முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில்   நுழைந்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்