மணிமேகலா தெய்வம்

செல்வன்
செவ்வாய், 2 டிசம்பர் 2014 (18:39 IST)
மணிமேகலை காப்பியத்தில் வரும் மணிமேகலா தெய்வம் ஒரு பவுத்த தேவதை ஆவார்.
 
கடலில் மரக்கலம் மூழ்கும் நிலையில் உள்ளவர்களை காக்கும் சக்தி படைத்தவர் அவர். மணிமேகலை தவிர்த்து தென்கிழக்கு ஆசியா முழுமையும் அவரை அறிந்திருந்தது. மணிமேகலா தெய்வம் இந்துமகா சமுத்திரம் மற்றும் தென்சீன கடலின் பல யாத்ரிகர்களை காப்பாற்றியதாக இந்த நாடுகளில் நம்பிக்கை உண்டு.
 
மணிமேகலை காப்பியத்தில் கடலில் வணிகம் செய்ய சென்ற கோவலனின் முன்னோர் ஒருவரை இத்தெய்வம் காத்ததால் தான் கோவலனின் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரான மணிமேகலை எனும் பெயர் சூட்டபட்டது.
 
பவுத்தம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் எங்கும் கடலில் பரவிய மதம். இலங்கைக்கு அசோகசக்ரவர்த்தியின் பிள்ளைகள் மரக்கலம் மூலமாக சென்று பவுத்தம் பரப்பினார்கள். இந்தோனேசியா, பாலி, மலேயா, சீனாவெங்கும் பவுத்தம் கடல் மார்க்கத்திலும், தரை மார்க்கத்திலும் பரவியது.
 
அக்காலகட்டத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருந்த இந்த நாடுகளை இணைக்கும் கலாசார சங்கிலியாக பவுத்தம் விளங்கியது. ஆக கடலை நம்பியிருந்த பவுத்தத்தில் கடலோடிகளை காக்கும் ஒரு தெய்வம் தோன்றியதில் வியப்பில்லை அல்லவா?
 
மணிமேகலா தெய்வம் பாலி மொழியில் உள்ள புத்த ஜாதக கதைகளில் தோன்றுகிறார். அதில் ஒரு கதை பின்வருமாறு:
 
"முன்பு காசி மோலினி எனும் பெயரில் அழைக்கபட்டது. அந்த நகரில் சம்கன் எனும் பிராமணன் வசித்து வந்தான். மிகுந்த செல்வம் நிரம்பிய சம்கன் நகரின் ஆறு வீதிகளிலும் தருமசத்திரம் நடத்தி ஏழைகளுக்கு தன் செல்வத்தை வாரி கொடுத்து வந்தான். அவனது செல்வம் தீரும் நிலை வந்ததும் "செல்வம் தீருமுன் நான் தங்கநகரம் சென்று மேலும் பொருள் தேடிவருவேன்" என முடிவெடுத்து தன் மனைவி, பிள்ளைகளை அழைத்து "நான் வரும்வரை தானம் நிற்காமல் தொடரவேண்டும்" என உத்தரவிட்டு தன் பணியாட்களுடன் கப்பலில் ஏற துறைமுகத்துக்கு சென்றான்.
 
இதை கந்தமான மலையில் இருந்து பார்த்தார் ஒரு பிரத்யேகபுத்தர் (குரு இன்றி ஜென் நிலையை அடைந்தவரே பிரத்யேகபுத்தர்). தன் ஞானதிருஷ்டியால் அவன் அபாயத்தில் சிக்கபோவதை அறிந்தார். புத்தருக்கு உதவினால் அவனுக்கு மிகுந்த புண்ணியம் கிட்டும் என முடிவெடுத்தார். காசியில் கொளூத்தும் வெயிலில் நடந்து சென்று சம்கன் முன் தோன்றினார்
 
மேலும் அடுத்த பக்கம்...

கொளுத்தும் வெயிலில் ஒரு சன்யாசி நிற்பதை கண்ட சம்கன் பதைபதைத்து அவரை மரநிழலில் அமரவைத்தான். அவருக்கு உபசாரம் செய்து தன் காலணிகளையும், குடையையும் தானமாக வழங்கினான். அதன்பின் கப்பலில் ஏறி பயணம் செய்தான்.
 
ஏழுநாள் பயணம் செய்தபின் கப்பலில் ஓட்டை விழுந்து நீரில் மூழ்க ஆரம்பித்தது. சம்கன் கப்பலில் இருந்த சர்க்கரையை வெண்ணெயில் கலக்கி ஏராளமாக எடுத்து உண்டான். உடலெங்கும் எண்ணெயை தேய்த்துகொண்டு தன் பணியாளுடன் கடலில் குதித்து நீந்தினான்.
 
ஏழுநாட்கள் இருவரும் கடலில் நீந்தி சென்றார்கள். எதையும் உண்ணவில்லை எனினும் ஏழாம் நாள் விரதநாள் என்பதால் சம்கன் ஏழாம் நாளில் விரதம் இருப்பதாக நினைக்க துவங்கினான்.
 
இம்மாதிரி கடலில் தவிக்கும் பிக்குகள், புண்ணியாத்மாக்கள், பெற்றோருக்கு பணிவிடை செய்தவர்கள் ஆகிய மூவரையும் காக்கும் பொருட்டு வானவர்கள் மணிமேகலா தெய்வத்தை நியமித்து இருந்தார்கள். ஆனால் "இவர்கள் என்னை எதற்கு பணியில் நியமிக்க வேண்டும்? நான் என்ன இவர்களது பணியாளா?" எனும் கோபத்தில் ஏழுநாட்கள் மணிமேகலா தெய்வம் அப்பணியை செய்யவில்லை. ஏழாம் நாளில் இவர்கள் கடலில் தவிப்பதை கண்டாள். "இவர்கள் இறந்திருந்தால் எனக்கு கெட்ட பெயர் கிட்டியிருக்கும்" என வருந்தி தங்கபாத்திரம் ஒன்றில் உணவை நிரப்பிகொண்டு சம்கன் முன் தோன்றினாள். அதை உண்ண சொல்லி கொடுத்தாள்.
 
சமுகன் "இன்று விரதம். உண்ணமாட்டேன்" என மறுத்தான்.
 
பணியால் கண்ணுக்கு மணிமேகலா தெய்வம் தெரியாததால் அவன் சம்கன் பித்து பிடித்து பிதற்றுவதாக எண்ணிகொண்டான். அதை நிருபிக்க அதன்பின் மணிமேகலா தெய்வம் இருவருக்கும் காட்சி கொடுத்தாள். அதன்பின் "ஏழு நாள் பசியில் இருந்த பின்னரும் விரதம் காரணமாக உணவை மறுத்தாய். அதனால் உனக்கு வேறு என்ன வரம் வேண்டும்?" என கேட்டாள்.
 
"நீ என்னை காப்பாற்ற என்ன காரணம்?" என சம்கன் வினவியதும் பிரத்யேகபுத்தருக்கு காலணி கொடுத்த புண்ணியமே அவரை காப்பாற்றியதாக மணிமேகலா தெய்வம் கூறினார். அதை கேட்ட சம்கன் மகிழ்ந்து தானதருமம் செய்ய பொருளுடன் தன்னை மோலினி நகருக்கு அனுப்பி வைக்க வேண்டினான்.
 
அதன்பின் ஏழுகப்பல்கள் நிறைய பொன்னும், ஆரரணமும், வைரமும் நிரப்பி சமுகனை காசிமாநகருக்கு அனுப்பினார் மணிமேகலா தெய்வம். அதன்பின்  சமுகன் இறக்கும்வரை நிறைய தானதருமம் செய்துவந்தான். பின்னாளில் சமுகனே புத்தராக அவதரித்தான். மணிமேகலா தெய்வம் உப்பலவாணி எனும் பிக்குவாக அவதரித்தார். அந்த பணியாள் ஆனந்தன் எனும் பிக்குவாக அவதரித்தான்.
 
மணிமேகலா தெய்வத்தின் வரலாறு பற்றி மேலும் தொடர்ந்து காண்போம்.