வேண்டுமானால் உங்கள் பணத்தால் ஏழைகளுக்கு உதவுங்கள் : விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:13 IST)
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.


 

 
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய், மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நல்ல முடிவு தான். நம் நாட்டுக்கு தேவையான, துணிச்சலான வரவேற்கத்தக்க முயற்சி தான்.
 
ஆனால் இந்த பாதிப்புகள் நோக்கத்தைவிட அதிகமாகிவிடக்கூடாது என்பதை பார்த்துக்கனும். சில விஷயங்களை நாம் தவிர்த்திருக்கலாம். எழை மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
 
தனது பேத்திக்கு, திருமணம் செய்ய நிலத்தை விற்று சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதும், ஒரு வயதான  மூதாட்டி தற்கொலைக்கு செய்து கொள்ள முயன்றதாக செய்திகளில் படித்தேன். மேலும், நாட்டில் உள்ள 20 சதவீதம் பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் 80 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
 
எனவே, மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று கூறினார்.
 
இதுபற்றி கருத்து ஒரு முன்னணி வார இதழுக்கு வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஏழை மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஏழைகள் வேதனையை போக்கத்தான் பிரதமர் மோடி,  ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக  வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ போன்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
 
மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் சினிமா பிரபலங்களும், அரசியல் வாதிகளுக்கும் நான் ஒன்று சொல்கிறேன். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இதற்கு முன்பும் இறந்து போயுள்ளனர். ஏழை மக்கள் மீது கரிசனம் காட்டும் நீங்கள், உங்களிடம் இருக்கும் பணத்தில், உங்களுக்கு தேவையானது போக, மீதியை ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தினால் அவர்களுக்கு பல உதவிகளை செய்ய முடியும். 
 
எனவே, அறிக்கை விடுவதை விட்டு விட்டு, தெருவில் வந்து மக்களுக்காக போராடுங்கள். மக்களின் துயரம் விலக மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது” என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்