சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தோழர் சீதாராம் யெச்சூரி ஒரு மாணவத் தலைவராக தைரியமாக எமர்ஜென்சியை எதிர்த்து நின்றதால், சிறு வயதிலிருந்தே நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்ட ஒரு அச்சமற்ற தலைவராக இருந்தார் என்று அவர் கூறியுள்ளார்.
தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன் என்றும் இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.