தமிழகத்தை நெருங்குகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு: 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (11:45 IST)
வங்கக்கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நெருங்குவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று முன்தினம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்த நிலையில் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 25 மாவட்டங்களிலும் சில மாவட்டங்களில் 16ஆம் தேதி வரை மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்