ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சி: திகில் கிளப்பும் தினகரன்!

சனி, 23 செப்டம்பர் 2017 (15:08 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் இருப்பதாக கூறி தினகரன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனை சசிகலா அனுமதியுடன் வெளியிட உள்ளதாக தினகரன் கூறியுள்ளார்.


 
 
ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். நாங்கள் பார்த்தோம், நலம் விசாரித்தோம், இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என அதிமுக அமைச்சர்கள், பேச்சாளர்கள் என அனைவரும் மாறி மாறி ஊடகங்களில் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இவை அனைத்தும் பொய். அன்று நாங்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என நாங்கள் கூறிய அனைத்தும் பொய். எங்களை ஜெயலலிதாவை பாரக்க சசிகலா அனுமதிக்கவில்லை. அவரை நாங்கள் நேரடியாக சந்தித்திருந்தால் ஜெயலலிதா தாம் கொல்லப்படுவதை கூறிவிடுவார் என்பதற்காவே எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று கூறினார்.
 
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று கர்நாடக மாநிலம் குடுகில் செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆளுநர் பார்த்துவிட்டு போய் அறிக்கை கொடுத்தார். அப்பலோ மருத்துவர்கள், ஊழியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் என பலரும் ஜெயலலிதாவை பார்த்தனர்.
 
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின்னர் எனது சித்தியை (சசிகலா) கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. சிபிஐ உத்தரவிட்டால் கூட எங்களுக்கு பயமில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் உள்ளன. சசிகலாவுடனான ஆலோசனைக்கு பின்னர் அதனை வெளியிடுவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
 
இதனை நாட்களாக சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி வந்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ பற்றிய கருத்தை தற்போது தீவிர அரசியலில் உள்ள தினகரன் கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்