தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்த விஜய், சமீபத்தில் கட்சியின் கொடியையும் பாடலையும் அறிமுகப்படுத்தியிருந்தார். இதையடுத்து, முதல் மாநாட்டிற்கான திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
மாநாடு நடத்த அனுமதி பெறுவதற்கு முன்பு, காவல்துறை 21 கேள்விகளை மனுவாக தாக்கல் செய்தது. அதற்கான பதில், கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி விஜய் தரப்பில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், முதற்கட்டமாக செப்டம்பர் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், குறுகிய நேரம் உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் சீராக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.