நீங்கதான் நம்ப வெச்சு ஏமாத்துறதுல கில்லாடி ஆச்சே! – எடப்பாடியாரை வாரிய டிடிவி!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (11:47 IST)
தமிழகத்தில் அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் பழனிசாமி அரசு ஏமாற்றுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையொட்டி அரியர் மாணவர்களும் அவருக்கு போஸ்டர் ஒட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அப்படி கடிதம் எதுவும் வரவில்லையென அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ” நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் “அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை மாணவர்களின் நலனிலும் காட்ட வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்