திருச்சி சிறையில் நாப்கின் ஊழல் – எஸ்.பி. மீது நடவடிக்கை

திங்கள், 24 டிசம்பர் 2018 (15:42 IST)
திருச்சியில் உள்ள பெண் கைதிகளுக்கான சிறப்பு சிறையில் நாப்கின் வழங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சிறைத்துறை எஸ்.பி. மீது கூறப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மரக்கடைப் பகுதிக்கு அருகில் மத்திய பெண்கள் சிறை உள்ளது. தமிழ்கத்தில் உள்ள பெண்கள் சிறையில் முக்கியமான மற்றும் பெரிய சிறையாக இந்த சிறை விளங்கி வருகிறது. இதில் 1000 க்கும் மேற்பட்ட பெண் சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்குள்ள பெண் கைதிகளிடம் நடத்திய ஆய்வில் கைதிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் நாப்கின் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இதனால் இது சம்மந்தமான மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்தது.

மேலும் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டபோது ’இது சம்மந்தமாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் மற்றும் பொதுசுகாதாரத்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியும் எந்த  நடவடிக்கையும் இல்லை’ என அறிக்கை சமர்ப்பித்தனர். அதனால் மனித உரிமைகள் ஆணையம் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளரை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, கைதிகளுக்கு நாப்கின் வழங்காமலேயே வழங்கியதாக போலியான ஆவணங்களைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும், இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளிலும் கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் மூலமே நாப்கின் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது. 

இதனால் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்