எம்.ஜி.ஆர் 31 வது நினைவுதினம் – அதிமுக தலைவர்கள் மரியாதை

திங்கள், 24 டிசம்பர் 2018 (12:07 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 வது நினைவுதினத்தை முன்னிட்டு இன்று மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் அண்ணா, கலைஞரை அடுத்து தமிழக முதல்வரானவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மீது கொண்ட பற்றால், அண்ணா தி.க. வில் இருந்து வந்து திமு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு ஆதரவாக தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். திராவிட இயக்கக் கருத்துகளை மக்கள் மனதில் பரப்புவதற்குத் தனது திரைப்படங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.

திமுக வுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அவர் பலமுறை திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுக இரண்டாகப் பிளவுபட இருந்த போது கருணாநிதிக்கு ஆதரவாக இருந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர்.

ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகளில் கலைஞருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் திமுக வில் இருந்து விலகி அதிமுக வை ஆரம்பித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வரானார். அதன் பின்னர் தொடர்ந்து 11 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து ஆட்சி செய்தார். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி உடல்நலக் குறைவால் பதவியில் இருந்த போதே உயிரிழந்தார்.

அவரையடுத்து ஜெயலலிதா தலைமையில் வழிநடத்தப்பட்ட அதிமுக தமிழ்கத்தை அதிகமுறை ஆண்டக் கட்சி என்ற பெருமைக்குரியதாக திகழ்கிறது. இன்று அவரது 31 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்