பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 4 ஜனவரி 2015 (12:42 IST)
திமுக பொருளாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும்  வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்  மு.க ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்“ என்றும் கூறினார்.
 
மேலும்,  “கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக ராஜினாமா கடிதம் எதையும் கொடுக்கவில்லை. திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு க. அன்பழகனும் போட்டியிடுகின்றன. நான் பொருளாளர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.
 
முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் நிலவியதாகத் தகவல்கள் வெளியாயின.
 
மேலும், ஸ்டாலின் கட்சியை விட்டு விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஸ்டாலின் வீட்டருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்ததாகவும் தகவல் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.