திருச்சியில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு அபராதம் கட்ட சொல்லிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் வசூலிக்கும் முறைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில் அபராதம் வசூலிக்க ஏதுவாக இருந்தாலும், சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக சாலையில் செல்லும் வாகனத்தை நிறுத்தாமலே அதன் வண்டி எண்ணை வைத்து அபராத தொகை விவரங்களை வண்டி உரிமையாளரின் செல் எண்ணுக்கு அனுப்பி விடலாம்.
இப்படியாக திடீரென செல்போனில் அபராதம் கட்ட சொல்லி மெசேஜ் வருவதால் தான் எங்கு எப்போது விதிகளை மீறினோம் என தெரியாமல் வாகன ஓட்டிகளும் குழம்பி வருகின்றனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். சமீபத்தில் இவருக்கு அபராதம் கட்ட சொல்லி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1000 அபராதம் கட்ட சொல்லப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுவதற்கு ஹெல்மெட் போட சொல்வதும், அபராதம் விதிப்பதும் அநியாயமாக இல்லையா என கொதித்தெழுந்த விஜயகுமார் இதுகுறித்து தனது சக ஆட்டோ ஊழியர்களுடன் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளார்.