ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலீசார் தடியடி நடத்தியதிலும், துப்பாக்கியால் சுட்டதிலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்திக்க கமல்ஹாசன் இன்று காலை தூத்துக்குடி சென்றார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் ‘ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். அது கூட தற்காலிக தண்டனைதான். நிரந்தர தண்டனையை மக்கள் தேர்தலின் போது கொடுப்பார்கள்” என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது கமல்ஹாசன் மக்களை சந்தித்து பேசியது தவறு என தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு சென்றது தவறு என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.