ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: திடீர் உடல் நலக்குறைவு!

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (10:26 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று கோவையில் நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
 
அப்போது மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இது குறித்து கூறிய மருத்துவமனை டாக்டர், இளங்கோவன் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து தற்போது நல்ல நிலையில் உள்ளார்.  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
 
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
அடுத்த கட்டுரையில்