அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் துரை கண்ணன் முறையீடு வழக்கு மற்றும் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரிய அமலாக்கத்துறை மனு ஆகியவை இன்று விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், திமுகவினரை சீண்ட வேண்டாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ''எங்களுக்கும் அரசியல் தெரியும். இது மிரட்டல் அல்ல. எச்சரிக்கை. மனம், உடல் ரீதியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில், செந்தில் பாலாஜிக்கு இதய நோயை உருவாக்கி உள்ளனர். இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
தமிழகத்தில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுபவர். அவரை எதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து, விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நாட்டில் இருக்கிறதா? உத்தரபிரதேசம் குஜராத்தில் ரெய்டு நடத்தப்படாது…எனென்றால் தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக ஜனநாயக விரோத செயலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ''என்று தெரிவித்துள்ளார்.