நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா என ஆறு கட்சிகள் இணைந்து சந்தித்தது. இந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த இந்த கட்சிகள் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுவதாக அவ்வப்போது செய்திகள் உலா வந்தன.
அது கிட்டத்தட்ட தற்போது உறுதியாகி உள்ளது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் வருகிற உள்ளாட்சி தேர்தலை தனியாக சந்திக்க இருப்பதாக அறிவித்து லாவகமாக கூட்டணியில் இருந்து வெளியாகி விட்டது.
விஜயகாந்தின் தேமுதிகவும் கூட்டணியில் இருந்து வெளியேற ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் இத்தனை காலம் தேமுதிக-மக்கள் நல கூட்டணி உள்ளாட்சி தேர்தல் வரை நீடிக்கும் என கூறிவந்த திருமாவளவன் நேற்று காட்டமான பேட்டி ஒன்றை அளித்தார்.
இதில் பேசிய திருமாவளவன், தேமுதிகவும், தமாகாவும் மக்கள் நலக்கூட்டணியின் அங்கம் கிடையாது என்றார். மக்கள் நலக்கூட்டணியில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மட்டுமே உள்ளன. எங்கள் அணியோடு, தேமுதிகவும், தமாகாவும் தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டன.
எனவே, உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எப்படி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை. தேமுதிகவும், தமாகாவும் விலகினால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காட்டமாக தெரிவித்தார்.
திருமாவளவன் இப்படி பேசியதற்கு காரணம் இருப்பதகவும் தகவல்கள் வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு திருமாவளவன் விஜயகாந்தை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், விஜயகாந்த் திருமாவளவனுடன் பேச ஆர்வம் காட்டவில்லையாம். இந்தக் கோபத்தில் தான் திருமாவளவன் அப்படி பேசியதாக கூறப்படுகிறது.