கர்நாடக மாநிலத்தில் நடந்த ராக்கிங் கொடுமையால் பாதிப்புக்கு உள்ளான கேரள மாணவி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அஸ்வதி (19). கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தங்கி இருந்த ஹாஸ்டலில் கடந்த மே 9ஆம் தேதி சீனியர் மாணவிகள் அவரைக் கட்டாயப்படுத்தி டாய்லட் கிளீனரை குடிக்க செய்து உள்ளனர்.
இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. ராக்கிங் செய்த சீனியர் மாணவிகளும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது.
இதில், அஸ்வதியின் உடல் நிலைமை மோசமடையவே, கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இங்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
டாய்லட் கிளீனரை குடித்ததால் உணவுக்குழாயின் பெரும் பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனால் அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் எனடாக்டர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து, அஸ்வதியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.
ஆனால் அங்கு 6 மாத சிகிச்சைக்கு பின்னரே அந்த அறுவைச் சிகிச்சை செய்யமுடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வதி மீண்டும் கோழிக்கோடு மருத்துவமனைக்கே மாற்றப்பட்டு உள்ளார்.