2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.
இதை அடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன் பின்னர் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.