செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.! டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் நோட்டீஸ்..!!

Senthil Velan
வெள்ளி, 31 மே 2024 (16:37 IST)
வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென மதுரை போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.
 
காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக  மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்தனர். சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். 

ALSO READ: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!
 
அதன்படி, முதல் நாளான இன்று காவல் நிலையத்திற்கு நேரில் வந்து டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்