தமிழகத்தில் பரவுகிறதா கொரோனா? – அமைச்சர் விளக்கம்

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (08:34 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த சிலர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரத்தில் கொரோனா வைரஸால் 300க்கும் அதிகமானோர் சீனாவில் உயிரிழந்திருக்கும் நிலையில் மற்ற சில நாடுகளில் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது.

சீனாவிலிருந்து விழுப்புரம் திரும்பிய இளம்பெண் ஒருவர் திடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சீனாவிலிருந்து திருவாரூருக்கு திரும்பிய நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு வார்டில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 12 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ”கொரோனா வைரஸை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் உள்ளவர்கள் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

எனினும் திடீர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் மக்கள் தஞ்சமடையும் சம்பவங்கள் சில பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்