நடிகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக தமிழருவி மணியன் ரஜினிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. ரஜினி அரசியல் ஆலோசகர் போல, கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருகிறார் தமிழருவி மணியன்.
இந்நிலையில் ரஜினியின் அரசியலுக்கு முன்னோட்டமாக நேற்று திருச்சியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி முடித்தார் தமிழருவி மணியன். இதில் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் திரண்டி பொதுக்கூட்டத்தை அமர்க்களப்படுத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன் தமிழக அரசியல் குறித்தும் ரஜினியின் பிரவேசம் குறித்தும் பேசினார். மேலும் தற்போது உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார் தமிழருவி மணியன்.
அவர் பேசும்போது, நாளை ரஜினிகாந்த் வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர வைக்கவே இந்த மாநாடு. நாங்கள் தெருத் தெருவாக பிச்சை எடுத்து கடன் வாங்கித்தான் இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை நாகராஜன் போன்று சசிகலா குடும்பத்திடம் தேங்காய் பொறுக்கி கொண்டிருந்தவர். இதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் குறித்து அவரது குரலாக இருந்து பேசும் தமிழருவி மணியன் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியிடம் ஆலோசனை செய்யாமல் அவர் இப்படி பேசியிருப்பாரா எனவும் பேசப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு அதிராகரப்பூர்வமாக இறங்குவதற்கு முன்னரே அவரை சேர்ந்தவர்கள் நேரடியாக ஆளும் கட்சியை விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.