முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி செல்லாக்காசு என விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது ஆரம்பம் முதலே பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி சசிகலா அணிக்கு ஆதரவாகவும், ஓபிஎஸ் அணிக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வந்தார்.
இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி, அதிமுக அணியில் இருந்து பிரிந்துசென்ற பன்னீர்செல்வம் செல்லாக்காசு என்பதைத் தாமதமாக உணர்ந்த அவரது அணியினர் அவரைவிட்டுப் பிரிந்து செல்கின்றனர் என்றார்.
தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று கோவை வந்த சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு நன்றாகவே தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக உள்ள பன்னீர்செல்வம் விரைவில் தான் ஒரு செல்லாக்காசு என்பதை உணர்வார் என்றார்.