திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும்,14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10 :30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் சமூகநீதிக்கான அரசு இது!
பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்!
நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்...என்று வீடியோ பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.