காமெடி அரசியல்வாதி ஸ்டாலின் சின்ன பசங்க மாதிரி பன்றாரு!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (10:37 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான திமுக நடந்து கொண்ட விதம் அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு கண்டனத்துக்கு உள்ளானது. சபாநாயகரின் சட்டை கிழிக்கப்பட்டு, அவரது மைக், நாற்காலி போன்றவை சேதப்படுத்தப்பட்டது.


 
 
மேலும் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து திமுகவினர் அட்டகாசம் செய்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை சட்டசபை காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
 
இதனையடுத்து வெளியே வந்து ஊடகத்தினரை சந்தித்த ஸ்டாலின் தனது சட்டையை சட்டசபை காவலர்கள் கிழித்துவிட்டதாகவும், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் குற்றச்சாட்டை வைத்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தேமுதிக மகளிர் அணி தலைவியும் அந்த கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலினை காமெடி அரசியல்வாதி என கடுமையாக விமர்சித்தார்.
 
ஸ்டாலின் காமெடி அரசியல் பண்ணுகிறார். ரகளை அரசியல் என்பது திமுகவின் பரம்பரைச் சொத்து. ஆட்சியை  கலைத்து விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று மனப்பால் குடிக்கிறார் ஸ்டாலின்.
 
வெறும் 29 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஜெயலலிதா என்கிற மதம் கொண்ட  யானையை சினம் கொண்ட சிங்கமாக ஒண்டிக்கு ஒண்டி எதிர்த்தார் விஜயகாந்த். சட்டை, பனியன் கிழியாமல் வெளியே வந்தார். ஆனால் 89 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு சின்னப் பசங்க போல சட்டை பனியனை கிழித்துக் கொண்டு வெளியே வருகிறார் அவர் ஒரு காமெடி அரசியல்வாதி என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
அடுத்த கட்டுரையில்