800 பயணிகளை காப்பாற்றிய சம்பவம்! ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் சேவா புரஸ்கார் விருது!

Prasanth Karthick
புதன், 18 டிசம்பர் 2024 (11:10 IST)

கடந்த ஆண்டு தென் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது ரயிலை தக்க சமயத்தில் நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் ரயில்வேதுறையின் உயரிய விருது வழங்கப்படுகிறது.

 

 

கடந்த 2023ம் ஆண்டில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி என பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் தாண்டி பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

 

இதனால் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி, அவ்வழியாக சென்ற சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயிலை தடுத்து நிறுத்தி ஸ்டேஷனிலேயே நிற்க செய்தார். இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என்னவென்று புரியாமல் பயணிகள் அசௌகர்யத்திற்கு உள்ளானாலும், காலை விடிந்தபோது அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு தாங்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தனர்.
 

ALSO READ: பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு.!
 

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தள்ளி தண்டவாளம் செல்லும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தண்டவாளம் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது, ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியால் பல உயிர்கள் அன்று காப்பாற்றப்பட்டன.

 

இந்நிலையில் ரயில்வே துறையில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் சிறந்த 100 ஊழியர்களை தேர்வு செய்து மத்திய அரசு அதி விஸிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருதை வழங்கி கௌரவிக்கிறது. பல மக்களை காப்பாற்றியதற்காக இந்த ஆண்டு ஸ்ரீவைகுண்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கும் ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி கொண்டாடப்படும் ரயில் வார விழாவின்போது மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்