இலங்கை கடற்படையினர் நேற்று முன் தினம் 23 தமிழக மீனவர்களை கைது செய்த நிலையில், இன்று மீண்டும் 12 மீனவர்களை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக இருக்கும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் சங்கங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மீனவர்கள் கைதை கண்டித்து, இன்று பாம்பன் பாலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.