நானும் ரஜினி ரசிகன்தான் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி கருத்து பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பாஜகவில் இணையவேண்டும் என பல அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்தவர்கள் என்னவானார்கள் என எல்லோருக்கும் தெரியும். ரஜினிகாந்த் பேசியது பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் கூறுவது போல் சிஸ்டம் கெட்டுப்போகவில்லை. வலிமையான மக்கள் இயக்கமாக அதிமுக திகழ்கிறது. ரஜினி ஒரு சிறந்த வியாபாரி. அவரின் படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர்” என கூறினார். இது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ “ நானும் ரஜினி ரசிகன்தான். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என அவர் கூறுவதையும், மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி என கூறுவதையும் ஏற்கமுடியாது” என அவர் கூறினார்.
ரஜினி ஒரு வியாபாரி என கருத்து கூறிய செல்லூர் ராஜூ, தற்போது நானும் அவரின் ரசிகனே என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.