என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சவால் விடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் தேர்தல் பிரச்சார முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது வீட்டு முகவரியைக் கொடுத்து முடிந்தால் அங்கு வந்து சோதனை செய்யுமாறு வருமான வரித்துறையினருக்கு அழைப்பு விடுத்து பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து சீமானும் வருமானவரித்துறை என் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த அமைப்புகளை பிரதமர் மோடி ஐந்து வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். அதை வைத்து மிரட்டி வருகிறார். அச்சுறுத்த கடைசி ஆயுதமாக வருமான வரித்துறை சோதனை பயன்படுத்துகின்றனர். ஏன் என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சவால் விடுத்தார்.