பாய்ந்து வந்து, தன்னை தாக்கிய சிறுத்தைபுலியுடன் போராடி உயிர் பிழைத்த விவசாயி

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (08:03 IST)
சத்தியமங்கலம் வனப் பகுதியில் மாடு மேய்க்க சென்ற விவசாயியை தாக்கிய சிறுத்தைப்புலியோடு, துணிச்சலுடன் போராடி அவர் உயிர் தப்பினார்.
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர், விவசாயி சின்னகுட்டியப்பன். இவருக்கு வயது 38.  இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்காக தோட்டத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிக்கு ஓட்டி செல்வார்.
 
வழக்கம்போல, சின்னகுட்டியப்பன் மாடுகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு ஒட்டி சென்றார். அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த ஒரு சிறுத்தைப்புலி சின்னகுட்டியப்பன் மீது பாய்ந்தது. இதில் கீழே விழுந்த சின்னகுட்டியப்பனை சிறுத்தைப்புலி தாக்க தொடங்கியது.
 
உடனே அவர், தன்னுடைய கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுத்தைப்புலியின் உடலில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது.
 
சிறுத்தைப்புலி தாக்கியதால், சின்னகுட்டியப்பன் படுகாயம் அடைந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் அவரைப்பார்த்ததும், காயம் அடைந்த சின்னகுட்டியப்பனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
 
தன்மீது பாய்ந்த சிறுத்தைப்புலியுடன் துணிச்சலுடன் போராடி உயிர்தப்பிய இந்த விவசாயியின் செயலை எண்ணி அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.