சசிகலா டிசம்பர் 5-ஆம் தேதியே முதல்வர் ஆகியிருப்பார்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தகவல்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:50 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. இந்நிலையில் அதிமுக அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.


 
 
இதனையடுத்து சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என அதிமுக நிர்வாகிகள், எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூறி வருகின்றனர். அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் பேனர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வருகின்றனர் அதிமுகவினர்.
 
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் போது சசிகலா முதல்வராக வர வேண்டும் என அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சரே கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
 
இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென்று சசிகலாவை முன்னிறுத்துவது ஏன்? சசிகலாவிற்காக பதவியை விட்டுக்கொடுப்பார் ஓபிஎஸ் என்று அதிமுக அமைச்சர் கூறுகிறாரே? என கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், சின்னம்மா நினைத்திருந்தால் டிசம்பர் 5-ஆம் தேதியே முதல்வர் ஆகியிருப்பார். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது கட்சி சார்பில் முதல்வர் பொறுப்பில் உள்ளார். விரைவில் சின்னம்மா சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.
அடுத்த கட்டுரையில்