அதிமுகவின் இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கா, ஓபிஎஸ் அணிக்கா என்பதை இறுதி செய்யும் வாதம் தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணியினர் தங்கள் அணிக்கு பலம் சேர்க்கும் என வைத்த ஒரு வாதத்தை சசிகலா தரப்பு வக்கீல் தங்களுக்கு சாதகமாக மாற்றி ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
முதலில் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பின் சார்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்றனர். அதன்படி 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த பத்திரங்களின் அடிப்படையில் 43,63,328 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என வாதிட்டனர்.
இதனை சசிகலா தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம் ஓபிஎஸ் அணிக்கு எதிராக திருப்பிவிட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். ஓபிஎஸ் தரப்பு இந்த ஆவணங்களை ஜோடித்துள்ளது, இதில் பல குளறுபடிகள் உள்ளது என்றார்.
அப்படியே ஓபிஎஸ் தரப்பு அளித்துள்ள ஆவணம் உண்மையென்றாலும் சசிகலாவுக்குத்தானே அதிக ஆதரவு உள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புக்கொண்டு விட்டார்களே.
அதாவது அதிமுகவின் தொண்டர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடியாகும். ஆனால் ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றுதான் கூறியுள்ளது. அப்படிப்பார்த்தால் சசிகலா அணிக்கே அதிக ஆதரவு உள்ளது என சிக்ஸர் அடித்தார் சசிகலா தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம்.