நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு... மின் வாரியத்தை சீரழித்து திமுக அரசு: சசிகலா

Mahendran
சனி, 27 ஜூலை 2024 (15:35 IST)
தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், மின் வாரியத்தை சீரழித்து திமுக அரசு என்றும் சசிகலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை மக்களுக்கு இடையூறு இல்லாமல் மின் விநியோகம் வழங்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். திமுக தலைமையிலான அரசு தனது நிர்வாக திறமையின்மையால் மின் வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரிகட்டுவதற்கு, ஏழை, எளிய, சாமானிய மக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற அன்றைய மைனாரிட்டி திமுக ஆட்சிக்காலத்தில், இதேபோன்று மின் வாரியத்தை சீரழித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக அன்றைய திமுக ஆட்சியில் இருந்த துறை அமைச்சரே, "மின் வெட்டு துறை அமைச்சர்" என்று பெயரெடுத்ததையும் யாராலும் மறந்துவிட முடியாது. ஆனால் அதே சமயம் அடுத்து ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது நிர்வாக திறமையால் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 2022 ஆம் ஆண்டு 25சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதம் வரை மின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான தமிழக மக்கள் அதிலிருந்து மீளமுடியாமல் போராடி வரும் நிலையில், தற்போது திமுக தலைமையிலான அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதன் காரணமாக ஏழை எளிய சாமானிய மக்கள், சிறு,குறு தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் இன்னலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு திமுக தலைமையிலான அரசு அதனை ஏன் இன்னும் செய்யவில்லை?
 
திமுக தலைமையிலான அரசால் எந்தவித மின் உற்பத்தி திட்டங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட உடன்குடி, எர்ணாவூர் அனல்மின் நிலைய திட்டங்களை இந்த ஆட்சியாளர்களால் விரைவில் பூர்த்திசெய்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடியவில்லை. திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வெளியிலிருந்து வாங்குவதால் மின் வாரியத்திற்கு மேலும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மின் வாரியத்திற்கு தற்போது ரூபாய்.1,60,000 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி முடியும்வரை மின் வாரியம் அதன் சரிவிலிருந்து மீளவே முடியாது என்பது தெளிவாக புரிகிறது.
 
திமுக தலைமையிலான அரசால் மின் தடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் போன்றவை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், இன்றைக்கு பெரிய அளவிற்கு மின் இழப்பு ஏற்படுகிறது. எனவே, திமுகவினருக்கு மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லை. தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை 2026ல் எப்படி தமிழக மக்களை ஏமாற்றி,வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை கொண்டு வருவது என்ற சிந்தனையில்தான் திமுகவினர்இருக்கின்றனர்.  எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை தடையின்றி வழங்கவேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்