ஜெ.வின் சிலையில் நடந்த குளறுபடிகள் : இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (11:14 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையில் என்ன குளறுபடிகள் நடந்துள்ளது என்பது வெளியே கசிந்துள்ளது.

 
ஜெ.வின் 70வது பிறந்த நாளையொட்டி கடந்த 24ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.வின் 70 அடி உயர வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால், அந்த சிலையை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த சிலையின் எந்த பக்கத்திலும் ஜெ.வின் சாயல் இல்லை.
 
எனவே, இந்த விவகாரம் சமூக வலைத்தளங்கலில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது. அந்த சிலையை சசிகலா, வளர்மதி, முதல்வரின் மனைவி உள்ளிட்ட பலரோடு ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் உலா வந்தன. இதனால் கோபமடைந்த அமைச்சர் ஜெயக்குமார், மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் சிலையை விமர்சிப்பார்கள் என கோபமாக கருத்து தெரிவித்தார். ஆனால், இன்னும் 15 நாட்களில் ஜெ.வின் சிலையில் மாற்றம் கொண்டுவரப்படும் என தற்போது பல்டி அடித்துள்ளார்.
 
இந்நிலையில், ஜெ.வின் சிலை உருவாக்கத்தில் நடந்துள்ள குளறுபடிகள் வெளியே கசிந்துள்ளது. ஜெ.வின் 69வது பிறந்த நாளான கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்றே தலைமை செயலகத்தில் ஜெ.விற்கு வெண்கலை சிலை வைக்க திட்டமிட்டு, அதற்கான பணியை விஜயவாடவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார் சசிகலா. ஆனால், அதன் பின்பு ஓ.பி.எஸ் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள், எடப்பாடி முதல்வர் நியமனம், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது, சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக எடப்பாடி திரும்பியது என பல சம்பவங்கள் அரங்கேற, அதிமுக தலைமை அலுவகத்திற்கு தினகரன் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த வருடம் சிலையை நிறுவ முடியவில்லை.

 
இந்நிலையில், ஜெ.வின் 70வது பிறந்த நாளிலாவது ஜெ.வின் சிலையை நிறுவ வேண்டும் என பல அதிமுக தலைகள் கோரிக்கை வைக்க, சசிகலா தரப்பு ஏற்கனவே விஜயவாடாவில் ஜெ.வின் சிலைக்கு ஆர்டர் கொடுத்திருந்தது எடப்பாடி, ஓ.பி.எஸ் தரப்பிற்கு தெரிய வந்துள்ளது. எனவே,  எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு அவர்களை தொடர்பு கொண்டு கடந்த ஜனவரி மாதம் பாதியில்தான் சிலையை உருவாக்க சொன்னார்களாம். இதில், முக்கிய பிரச்சனை என்னவெனில், சிலை உருவான போது யாரும் அங்கு சென்ற பார்வையிட்டு திருத்தங்களை கூறவே இல்லையாம். 
 
அதேபோல், சிலை வேலை முடிந்து பேக்கிங் செய்யப்பட்டு அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளது. அப்போதும் யாரும் அதை பார்க்கவே இல்லையாம். அவசர அவசரமாக பீடத்தில் நிறுவப்பட்ட அந்த சிலையை திறப்பு விழாவின் போதுதான் முதல்வர்-ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் தரப்பு பார்த்ததாக தெரிகிறது. எனவே, ஜெ.வின் சிலையில் மாற்றம் கொண்டு வரும் வேலையில் தற்போது அவர்கள் இறங்கியுள்ளனர்.
 
மூச்சுக்கு மூச்சு அம்மாவின் ஆட்சி, இதய தெய்வம் புரட்சித் தலைவி என்றெல்லாம் மேடைக்கு மேடை, பேட்டிக்குப் பேட்டி பேசும் இவர்கள், ஜெ.வின் சிலை விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டிருப்பது அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஒரு சேர கொடுத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்