காதலித்த மகளை கௌரவ கொலை செய்த தந்தை

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:18 IST)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் காதலித்த மகளை அவரது தந்தையே கௌரவ கொலை செய்துள்ளார்.

முதுகுளத்தூரில் இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் அவரது தந்தையே மகளை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

முதுகுளத்தூர் தாலுகா வாசிபுரம் அருகே கதையன் கிராமத்தைச் சேர்ந்த அல்லிராஜன் என்பவரது மகள் 16 வயதுடைய திவ்யா. இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் 24 வயதுடைய சரண்ராஜ் என்பவரும் காதலித்துவந்தனர்.

இந்நிலையில், சென்னையில் கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வந்த சரண்ராஜ் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி திவ்யாவுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை அல்லிராஜன் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணைக் காவல்துறையினர் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி திவ்யா வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அல்லிராஜன் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார்.

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் திவ்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்குப் பதிவு செய்திருந்தனர். பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்தது.

ஆனால் அவர் பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் அல்லை என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனையில் திவ்யாவின் தந்தை அல்லிராஜன் தனது மகளை தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் காவல்துறையினர் திவ்யாவின் தந்தை அல்லிராஜனை கைது செய்தனர்.