கமலுக்கு சகுனம் சரியில்லை - போட்டுத் தாக்கும் ராஜேந்திர பாலாஜி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:47 IST)
அரசியலில் அடி எடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு சகுனம் சரியில்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.   
 
மேலும், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.
 
அந்நிலையில், இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு, நாளை ராமேஸ்வரத்தில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார். ஏறக்குறைய ஒரு முழு அரசியல்வாதியாக கமல்ஹாசன் மாறி வருகிறார்.
 
இந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
“கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. கட்சி நடத்துபவர்களிடம் கமல்ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். அவர்களிடம் ஆதரவு கோரும் கமலின் முடிவு கேலிக்கூத்தாக முடியுமே தவிர விஸ்வரூபமாக மாறாது. எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” என தெரிவித்தார். 
 
மேலும், வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்