நெல்லையில் போலீஸ் வாகனத்தில் இருந்த கைதி சரமாரியாக வெட்டி கொலை

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (15:52 IST)
பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து கைதி சிங்காரம், வழக்குகாக தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர் உள்பட நான்கு போலீஸார் கைதியுடன் வாகனத்தில் சென்றனர்.
 
வாகனம் நெல்லை நகர செக் போஸ்ட் அருகே சென்றபோது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை வழிமறித்து, காவல்துறையினர் மீது மிளகாய் தூள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதில் காவல்துறையினர் நிலைகுலைந்து போயினர். காவல்துறையினர் சற்று அசர்ந்த நேரத்தில் கார் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வெளியே இழுத்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றனர்.
 
இதையடுத்து உயிருக்கு போராடிய சிங்காரத்தை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிங்காரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்