முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. தரப்பில் வாதம் செய்தபோது பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்றும், அவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், நீதிமன்றம் டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரை கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல அது சட்டவிரோதமானது.
தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.