இந்திய ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும் வெற்றி வித்தியாசம் குறைவாக இருப்பதால், என்ன முடிவு வேண்டுமானாலும் வரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு முகியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் அதிமுக பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்தது. இதனாலே பாஜகவின் வெற்றி வாய்ப்பு எளிதானது. இந்நிலையில் அதிமுகவின் ஆதரவை சசிகலாவிடம் பெற பிரதமர் மோடியே முயன்றதாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கூறிய அவர், கட்சி சசிகலா கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி சசிகலாவிடம் ஆதரவு கேட்டார். தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்தார். அதன் பின் சசிகலா அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுங்கள் என்றார்.
பிரதமர் மோடி தம்பிதுரை மூலமாக சசிகலாவிடம் ஆதரவு கேட்டது உண்மை. பிரதமர் மோடி சசிகலாவிடம் ஆதரவு கேட்டதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சசிகலாவின் உத்தரவே காரணம் என்றார் வெற்றிவேல்.