பாஜக அலுவலகத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட பியூஷ்மானுஷ்: சேலத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (19:37 IST)
சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்கைகளில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் கூட ஒரு தனியார் ஜவுளி நிறுவனம் மரத்தை வெட்டியதற்காக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது
 
 
இந்த நிலையில் இன்று சேலம் பாஜக அலுவகம் சென்ற பியூஷ்மானுஷ், அங்கிருந்த தொண்டர்களிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். காஷ்மீர் பிரச்னை குறித்து விளக்கமளியுங்கள் என்றும் தான் கேட்கும் கேள்விகளுக்கு பாஜகவினர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூறி வந்தார். மேலும் தான் கேட்கும் கேள்விகளை அப்படியே ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார்.
 
 
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பாஜக தொண்டர்கள் பியூஷ் மனுஷூக்கு செருப்பு மாலை அணிவித்து, நீ ராஜஸ்தானுக்கே போ' என்று கோஷமிட்டனர். அதற்கு பின்னர் பியூஷ் மானுஷ் காஷ்மீர் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் பியூஷ் மானுஷை பாஜகவினர் தாக்க தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
ஒரு சம்பவம் நடந்தால் உடனே அந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் நம்மூர் அரசியல்வாதிகள் இதனையும் விட்டு வைக்கவில்லை. பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், 'சேலம் பாஜக அலுவலகத்தில் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயலை அறவழியில் வேரறுப்போம் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் தமிழிசை செளந்திரராஜன் இதுகுறித்து கூறியபோது, 'சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பியூஷ் மானுஷ் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, பொது அமைதியை காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்