’மாதொருபாகன்’ நாவல் பரபரப்புக்காக படைக்கப்பட்டது - ராமதாஸ் அதிரடி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (17:24 IST)
மாதொருபாகன் நாவல் சர்ச்சையை விதைத்து பரபரப்பை அறுவடை செய்யும் நோக்கத்துடன்தான் இது படைக்கப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "எழுத்தாளரும், தமிழ்நாடு அரசுக்கல்லூரி பேராசிரியருமான பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் புதினத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும், பெருமாள் முருகன் மற்றும் அவரது புதினத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
 
எழுத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால், மாதொருபாகன் புதினம் எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடா... அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதா? என்பது விவாதத்திற்குரிய விஷயம் என்பதில் அய்யமில்லை.
 
எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்; எழுத்தாளர்கள் போற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை.
 
இன்னும் கேட்டால் இதற்காக பல்வேறு கட்டங்களில் நானே களமிறங்கி போராடியிருக்கிறேன். அதேநேரத்தில் எழுத்தாளர்கள் சமூக அக்கறை கொண்டோராக இருக்க வேண்டும்; அவர்களின் படைப்புகள் பரபரப்பை ஏற்படுத்துபவையாக இல்லாமல் சமூகத்துக்கு பாடம் சொல்பவையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.
 
பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் இந்த இலக்கணத்திற்கு உட்பட்ட படைப்பா? என்ற வினாவை எழுப்பினால், ‘இல்லை’ என்ற பதிலை யோசிக்காமலேயே கூறிவிடலாம். அந்த அளவுக்கு சர்ச்சையை விதைத்து பரபரப்பை அறுவடை செய்யும் நோக்கத்துடன்தான் இது படைக்கப்பட்டிருக்கிறது.
 
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் விசாகத் திருநாளின்போது மலையுச்சியில் நடைபெறும் விழாவில் அப்பகுதியில் வாழும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பார்கள் என்றும், அவ்விழாவிற்கு வரும் இளைஞர்களுடன் அவர்கள் கலப்பதன் மூலம் கருவுறுவார்கள் என்றும் மாதொருபாகன் புதினத்தில் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.
 
அதுமட்டுமின்றி, அந்த விழாவிற்கு பிறகு அந்த இரவில் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்கள் என்பதை பட்டியலிட்டு அந்த இளைஞர்கள் பெருமை பேசிக் கொள்வார்கள் என்றும் மாதொருபாகன் புதினத்தில் அவர் கூறுகிறார்.
 
இதன்மூலம் பெருமாள் முருகன் சொல்ல வரும் செய்தி என்ன? பெருமாள் முருகனின் இந்த கருத்துக்கும், தங்கள் சமுதாய இளைஞர்களின் ஆண்மைத் திறன் பற்றி சில தலைவர்கள் பெருமையுடன் பேசி வரும் அருவருக்கத்தக்க கருத்துக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
 
கண்ணகியை தெய்வமாக வழிபடும் சமூகத்தில், ஒரு சமுதாய பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா என்ற பெயரில் பொது இடத்தில் கூடி, தொடர்பில்லாத ஆண்களுடன் கலந்திருப்பார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இதனால் அச்சமுதாயத்தினரின் உணர்வுகள் புண்படாதா? தங்களை காயப்படுத்தும் ஒரு படைப்பை தடை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையில் எந்த தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை.
 
சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வழக்கை இருதரப்பு நியாயங்களின் அடிப்படையில் அணுகவில்லை. கருத்துரிமைக்கும், எழுத்துரிமைக்கும் சில அமைப்புகள் தடை போடலாமா? என்ற கோணத்தில் மட்டுமே இதை உயர்நீதிமன்றம் அணுகியுள்ளதாகத் தோன்றுகிறது. கருத்துரிமையை பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை பலி கொடுக்கலாம் என்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களை பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும்.
 
யதார்த்தத்திற்கும், பெரும்பான்மை உணர்வுகளுக்கும் எதிரான விஷயத்தை பேசுவதே முற்போக்கு, புரட்சி என்ற எண்ணம் நவீனகால புரட்சியாளர்களிடம் பரவி வருகிறது. அதன் விளைவுதான் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் படைப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்தீர்ப்பை பெற்றிருக்கின்றனர்.
 
மார்க்சிம் கார்க்கியின் ‘தாய் காவியம்’, கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ ஆகியவை சமூகத்திற்கு பாடம் கூறும் படைப்புகள்.
 
ஒருவேளை அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டால், அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தினால் அது கருத்துரிமை மற்றும் எழுத்துரிமையை காக்கும் செயலாக அமையும். அதைவிடுத்து ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் படைப்புக்கு துணை நிற்பது எந்தவகை புரட்சி எனத் தெரியவில்லை.
 
கருத்துரிமையை காக்கும் போராட்டம் என்பது பாகுபாடு இல்லாததாக இருக்க வேண்டும். இப்போது கருத்துரிமைக்காக போராடுபவர்கள் கடந்த காலங்களில் இதே சூழல் ஏற்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ற வினாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள் விடையளித்தாக வேண்டும். 1935ஆம் ஆண்டில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘துன்பக்கேணி’யும், 1977ஆம் ஆண்டில் வெளியான வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ என்ற நெடுங்கதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தன.
 
ஆனால், ஒரு சில பேராசிரியர்களும், மாணவர்களும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மிரட்டல் விடுத்ததாலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும் அந்த படைப்புகள் திரும்பப்பெறப்பட்டன. அதேபோல், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவ.செந்தில்நாதன் தனது பரிசல் பதிப்பகத்தின் சார்பில் வீரபாண்டியன் என்பவர் எழுதிய பருக்கை என்ற புதினத்தை வெளியிட்டார். அந்த புதினம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி முடக்கப்பட்டது.
 
இப்போது கருத்துரிமைக்காக கொடி பிடிக்கும் முற்போக்குவாதிகள் அப்போது கருத்து சுதந்திரத்திற்காக ஏன் கொடி பிடிக்கவில்லை? கருத்துரிமையை பாதுகாப்பதில் கூட பாகுபாடு காட்டுவது சரியா? என அவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையும், எழுத்துரிமையும் மிகப்பெரிய வரங்கள். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் அவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அழிவுக்காக பயன்படுத்தப்படக்கூடாது.
 
இனம், மொழி, மதம், சமுதாயம் ஆகியவற்றுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் படைப்புகளை உருவாக்கி பொது அமைதியை குலைக்க கருத்துரிமையையும், எழுத்துரிமையையும் பயன்படுத்தக்கூடாது. இதை எழுத்தாளர்கள் உணர்ந்து படைப்புக்களை படைத்தால் கருத்துரிமையும் வாழும், கருத்துக்களும் ஒளிரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்