வாக்குக் கேட்டு சென்ற அதிமுக கவுன்சிலரை விரட்டியடித்த பொதுமக்கள்

Webdunia
புதன், 4 மே 2016 (10:15 IST)
கோவையில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக கவுன்சிலரை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

கோவை மாநகராட்சியின் 21வது வார்டுக்கு உட்பட்ட காந்திபார்க் அருகே உள்ளது குமாரசாமி காலனி. இந்த காலனியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இங்கு எத்தகைய அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தித் தரப்படவில்லை.
 
இதனால் அப்பகுதி மக்கள் அவ்வப்போது அதிமுக கவுன்சிலரான செந்திலிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். ஆனால், அவர் கடந்த ஐந்தாண்டு காலமாக எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியமாகவே பதிலளித்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில் இப்பகுதிக்குட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் வேட்பாளர் அருண்குமார் போட்டியிடுகிறார். இதையடுத்து இவர் செவ்வாயன்று குமாரசாமி காலனி பகுதியில் வாக்கு சேகரிப்புக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடுகளை செய்யும் வகையிலும், வேட்பாளருக்கு வரவேற்பளிக்கும் வகையிலும் அப்பகுதி மக்களை திரட்டுவதற்காக அதிமுக கவுன்சிலர் செந்தில் அப்பகுதிக்கு வந்தார்.
 
அப்போது, கவுன்சிலர் செந்திலை கண்ட பெண்கள், இத்தனை நாளாய் எங்கே போனீர்கள்?, எதற்காக தற்போது இங்கே வந்தீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விளை தொடுத்து கவுன்சிலர் செந்திலை திணறடித்தனர்.
 
இதனால் செய்வதறியாது தவித்த கவுன்சிலர், தயவு செய்து இந்தமுறை மட்டும் வாக்களியுங்கள், அதன்பின் அனைத்து வசதிகளும் இப்பகுதிக்கு செய்து தருகிறேன் என கெஞ்சும் தொனியில் பேசினார்.
 
இதனால் மேலும் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள், மீண்டும் உங்களுக்கு எதற்கு நாங்கள் வாக்களிக்கிறோம். நீங்கள் இங்கிருந்து திரும்பிப் போங்கள். உங்கள் கட்சியினர் யாரும் இங்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என ஆவேசமாக தெரிவித்தனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்து கவுன்சிலர் செந்திலை, அவருடன் வந்த அதிமுகவினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீட்டு காரில் ஏற்றிக்கொண்டு அவசர, அவசரமாக தப்பிச் சென்றனர். மேலும், அங்கு வருகை தருவதாக இருந்த அதிமுக வேட்பாளரின் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டு, வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்