மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் சுங்கச்சாவடியில் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்
நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முன்பு இருந்த நடைமுறை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் ரூ.340 என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்றன. இதனால் கப்பலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியில் விதிக்கப்பட்ட கட்டணங்களை எதிர்த்து உள்ளூர் மக்களான மதுரை திருமங்கலம் டி கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்துள்ளது.