நீலகிரியில் கடந்த 12 நாட்களாக அகப்படாமல் இருந்து வரும் டி23 புலி ஆட்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
நீலகிரி மசினக்குடி பகுதியில் சுற்றி வரும் டி23 புலி நான்கு பேரை கொன்றுள்ள நிலையில் அதை பிடிக்கும் முயற்சியில் கடந்த 11 நாட்களாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த புலி ஆட்கொல்லியாக இல்லாமல் இருக்கலாம் எனவே கொல்ல வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று புலியின் வழித்தடத்தை கண்டறிந்து சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சிக்காமல் மீண்டும் டி23 தப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் ”புலியை பிடிக்க தினந்தோறும் வியூகங்களை மாற்றி செயல்பட்டு வருகிறோம். டி23 புலிக்கு வயது ஆகிவிட்டதால் காட்டில் உள்ள விலங்குகளை அதனால் வேட்டையாட முடியவில்லை. புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
வயதான டி 23 புலி விலங்குகளை வேட்டையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளதாகவும், அதற்குள் பாதுகாப்பாக புலியை பிடிக்க வேண்டும் எனவும் விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.