பவர் வந்தும் பவுசு இல்லாத நத்தம் விஸ்வநாதன்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (20:47 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.விசுவ நாதனுக்கு அதிமுகவில் புதிய பதவி கிடைத்தும், கட்சியினரிடம் வரவேற்பு கிடைக்காத நிலை உள்ளது. தற்போதைய அமைச்சர், கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுதான் காரணம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.


 

 
திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் பலம் பொருந்தியவராக மாவட்டச் செயலாளர், அமைச்சர், நால்வர் அணியில் இரண்டாம் இடம் என வலம் வந்த நத்தம் ஆர். விசுவநாதன். சட்டப்பேரவை தேர்தல் தோல்வியால் பதவி இழந்தார். அதனைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
 
இந்நிலையில், புதிய அமைச்சராக திண்டுக்கல் சி. சீனிவாசன் பொறுப்பேற்றார். மாவட்டச் செயலாளராக மேயர் மருதராஜ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் தலைமையின் உத்தரவுக்கேற்ப புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், பதவி ஏதும் இல்லாத நிலையில், ஆர்.விசுவநாதனுக்கு கடந்த வாரம் அமைப்புச் செயலாளர் பதவி மற்றும் செய்தி தொடர்பாளர் பதவியை கட்சித் தலைமை வழங் கியது.
 
பதவி கிடைப்பதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டுகளில் அவரது ஆதரவாளராக இருந்தவர்கள் பலர் புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு விசுவாசத்தை காட்டத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் அமைச்சராக சீனிவாசன் நியமிக்கப்பட்டபோதும், மாவட்ட செயலாளராக மருதராஜ் நியமிக்கப்பட்டபோதும் கட்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கட்சி நிர்வாகிகள் என தனித்தனியே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், விசுவநாதனுக்கு பதவி கிடைத்தபோது மாவட்டத்தில் யாரும் அவருக்கு பேனர் வைத்து வரவேற்பு தெரிவிக்கவில்லை.
 
இதையடுத்து, தன்னை அமைப்புச் செயலாளராக நியமித்த கட்சித்தலைமைக்கு நன்றி தெரிவித்து விசுவநாதனே நகரில் பல இடங்களில் பேனர்களை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் அமைச்சரால் பயனடைந்தவர்கள் சிலர், இன்னமும் அவருக்கு விசுவாசமாகத்தான் இருக்கின்றனர். அவருக்குப் பதவி வழங்கியதை வாழ்த்தி பேனர் வைத்தால், அவரது கோஷ்டி என முத்திரை குத்திவிடுவரோ என்ற அச்சத்தால், யாரும் வைக்கவில்லை. மேலும் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், இதில் வேட்பாளர்கள் தேர்வை மாவட்டச்செயலாளர், அமைச்சர் தான் கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்வர்.
 
விசுவநாதனின் ஆதரவாளர்கள் எனத் தெரிந்தால், உள்ளாட்சித் தேர்தலில் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது என்று நினைத்து, வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே யாரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கவில்லை. இருப்பினும், தற்போதைய அமைச்சர் சீனிவாசன், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்பதால் அனுபவம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சியை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் என்றனர்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர் 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்