கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கானோர்களில் பேச்சாளர்களும் அடங்குவர். குறிப்பாக அரசியல் மேடைகளில் காரசாரமாக பேசும் பேச்சாளர்களுக்கு சுத்தமாக வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு வேறு வேலையும் தெரியாது என்பதால் வாழ்வாதாரத்திற்காக திணறி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேசுவதற்கு மேடை இல்லாத காரணத்தால் தற்போது புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். சொல்காப்பியம்’ என்னும் பெயரில் யூடியூப் சேனல் தொடங்கியுள்ள அவர் இதில் தினமும் தனது கருத்துகளையும், உரையையும் வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார். அரசியல் மட்டுமின்றி தமிழின் பெருமையையும், திராவிடம் குறித்தும் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த சேனல் குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், ’கொரோனா என்னும் கொடிய வைரஸ் நாட்டை முடக்கியது மட்டுமல்ல. நாஞ்சில் சம்பத்தையும் முடக்கிவிட்டது. மேடைகள் வாய்க்காத சூழலில் எண்ணுகிற எண்ணங்களைப் பதிவு செய்ய ஒரு வடிகால் தேவைப்படவே ‘சொல்காப்பியம்’ சேனலைத் தொடங்கினேன்'' என்று கூறியுள்ளார்