சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் நா.முத்துக்குமார்?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:35 IST)
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மஞ்சள் காமாலை நோயால் மரணமடைந்த சம்பவம் தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமாரிடம் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லையா? அல்லது ஏன் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
 
சம்பாதித்த பணத்தை என்னதான் செய்தார்? முத்துக்குமார் தன்னை நம்பி வந்தவர்களுக்கு எப்போதும் தன்னால் இயன்றவற்றை செய்து வந்துள்ளார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தினர் குறிப்பிடுகின்றனர்.
 
மேலும், தான் பாடல்கள் எழுதும் படத்தின் தயாரிப்பாளர்களிடம் கராராக பணம் கேட்டு தொந்தரவு செய்தது இல்லையாம். இதனால், தயாரிப்பாளர்களும் அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாக கொடுப்பது இல்லையாம்.
 
தனது மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூட, “யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது” என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கர் பச்சான் தான் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “அவன் 1,500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித்தான் என எனக்குத்தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக்கொடுக்காத முத்துக்குமாருக்கு பெரும்பொருளாக அது சேரவேயில்லை.
 
தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு ஒரு பெரிய கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத்தான் இந்த 15 ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார். அவ்வாறு பெற்ற காசோலைகளை வங்கி கணக்கில் சேர்க்காமல், வீட்டு அலமாரியில் வைத்துள்ளார். இப்படி சேர்த்து வைத்துள்ள காசோலைகளின் மதிப்பு ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கின்றனர்.
 
இத்தைகைய நிலையிலும், மருத்துவச் செலவுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதை எடுத்து செலவு செய்யாமல் இருந்துள்ளார். இத்தகைய ஒரு சிறந்த கவிஞனை காலம் எடுத்துச் சென்றது காலத்தின் கோலம்தான்!
அடுத்த கட்டுரையில்