இனியொரு உயிர் பலியாக கூடாது: சுஜித்துக்கு முக ஸ்டாலின் இரங்கல்

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (07:34 IST)
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க மாநில மற்றும் தேசிய மீட்புக்குழுவினர் கடந்த 80 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, உறக்கமின்றி போராடிய நிலையில் கடைசியில் சிறுவன் சுஜித்தின் உயிரை காப்பாற்ற முடியவில்லை, உடலை மட்டுமே மீட்புக்குழுவினர் கடைசியில் மீட்டனர். 
 
இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், ஜோதிமணி எம்பி, ஊர்ப்பொதுமக்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் இறுதியஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஜித்தின் மரணத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்